திருச்சி மலைக்கோட்டையில் வீற்றிருக்கும் தாயுமானவர் திருக்கோயில்

By admin Mar11,2024

ராவணனின் சகோதரனான மூன்று தலைகளை உடைய திரிசரன், இங்குள்ள இறைவனை பூஜித்ததால் இத்தலம் சிராப்பள்ளி என அழைக்கப்பட்டது; பின்னர் மருவி திருச்சிராப்பள்ளி என்றாயிற்று. சுருக்கமாக திருச்சி.

ரத்னாவதி எனும் பெண்ணிற்கு, அவளுடைய தாய் உருவில் இத்தல ஈசன் வந்து பிரசவம் பார்த்ததால் தாயுமானவர் எனஅழைக்கப்பட்டார்.

மாணிக்கவிநாயகர் சந்நதி உள்ளிட்ட முதல் நிலை; மட்டுவார் குழலியம்மை சமேத தாயுமானவர் திருக்கோயில் இரண்டாம் நிலை; குடைவரைக் கோயில் உச்சிப்பிள்ளையார் கோயில் மூன்றாம் நிலை என்று அமைந்துள்ளது மலைக்கோயில்.

உச்சிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து கீழே பார்த்தால் படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும் விநாயகரின் துதிக்கை போல தோன்றும்.

தாயுமானவர் கோயில் குடமுழுக்குக்காக பொருளுதவி செய்தவரில் ஒருவர் பெயர் கல்வெட்டில் பிச்சைக்காரன் என பொறிக்கப்பட்டுள்ளது.

சித்திரைப் பெருந்திருவிழாவின் 5ம் நாள் செட்டிப்பெண் மருத்துவ நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சுகப்பிரசவம் நிகழ, சுக்கு வெல்லம் கலந்த மருந்துப்பொடி பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். அதனால் பயனடைந்தோர் அநேகம்.

பதினாறு கால் மண்டபத்திற்கு மேல் உள்ள மணி மண்டபத்தில்இரண்டரை டன் எடை, 4 அடி 8 அங்குல குறுக்களவும் கொண்ட மணியைக் காணலாம். இது கிரிக்டன் எனும் ஆங்கிலேயர் அளித்தது.

மலைப்பாதையின் நடுவில் ‘சிவ சிவ ஒலி மண்டப’த்தில் தினமும் காலை, மாலை இரு வேளையும் ஒலிபெருக்கியில் திருமுறை ஓதுதல் நடைபெறுகிறது.

மட்டு எனில் தேன் எனப்பொருள். தேன் நிறைந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவள் எனும் பொருள்படி இத்தல அம்பிகை மட்டுவார் குழலம்மை என அழைக்கப்படுகிறாள்.

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான திருவையாறு தியாகராஜர் இந்த மட்டுவார் குழலம்மை மீது பாடல்கள் புனைந்துள்ளார்.

அம்மன் சந்நதியின் முன் உள்ள மண்டபத்தில் சக்ரம் வரையப்பட்டுள்ளதால் அம்மனை சக்ரநாயகி என்றும் அழைப்பர்.

அம்மன் சந்நதி எதிரில் உள்ள பாதாள அறையில் பாதாள ஐயனார் அருள் புரிகிறார். விவசாயம் செழிக்க அருள்பவராம் இவர்.

தமிழ்நாட்டிலுள்ள நான்கு பெரிய லிங்கங்களில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்று.

தாயுமானவருக்கு அருகில் நாக கன்னியர் எட்டுபேர் அருள்கின்றனர்.

இத்தல தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்கள் நால்வர் தவிர, கூட இரு முனிவர்களுடன் தரிசனம் அளிக்கிறார்.

ஆலயத்தில் காணப்படும் கல்லால் உருவாக்கப்பட்ட சங்கிலி, கல் சிங்கத்தின் வாய்க்குள் சுழலும் கல்பந்து போன்றவை சிற்பக்கலை சிறப்புக்குசான்றுகள்.

இத்தலத்தில் அருளும் திருமகளை 108 செந்தாமரை மலர்களால் அர்ச்சிப்பவர்களின் கடன்கள் விரைவில் தீரும் என நம்பிக்கை.

பௌர்ணமி நாட்களில் திருச்சி மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலமும் நடக்கிறது.

சுகப் பிரசவத்துக்கு நேர்ந்து கொண்டவர்கள் தரும் வாழைப் பழத்தாரை அர்ச்சகர், பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கிறார்.

ஐப்பசி பௌர்ணமியில் தாயுமானவருக்கு அன்னாபிஷேகம் நடக்கும்

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *